Monday, July 23, 2012

விராத் விளாசல் தொடருமா?


 இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் சதம் விளாசிய விராத் கோஹ்லி, மீண்டும் அசத்தும்பட்சத்தில், இந்திய அணியின் வெற்றிநடை தொடரலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் இன்று நடக்கிறது.
சேவக் எதிர்பார்ப்பு:
முதல் போட்டியில் 4 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த சேவக், மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். வெறும் 3 ரன்னில் அவுட்டான கவுதம் காம்பிர் எழுச்சி கண்டால் நல்ல துவக்கம் கிடைக்கும். "சூப்பர் பார்மில்' உள்ள விராத் கோஹ்லியின் ரன் வேட்டை தொடர்ந்தால், மீண்டும் ஒரு சதத்தை பதிவு செய்யலாம். ரோகித் சர்மாவின் "பார்ம்' தான் கவலை அளிக்கிறது. "மிடில்-ஆர்டரில்' கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் கைகொடுக்கிறது. கடைசி நேரத்தில் இவர்கள் அதிரடி காட்டும் பட்சத்தில், இமாலய இலக்கை அடையலாம்.
பதான் நம்பிக்கை:
முதல் போட்டியில் தாமதமாக பந்துவீசியதால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தவிர்க்க இந்திய பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச வேண்டும். "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான் அணியில் இணைந்திருப்பது, வேகத்தில் நம்பிக்கை அளிக்கிறது. அனுபவ ஜாகிர் கான், இளம் உமேஷ் யாதவ் ஆகியோரது அசத்தல் இன்றும் தொடர்ந்தால் நல்லது. "மிடில்-ஓவரில்' அஷ்வின், பிரக்யான் ஓஜாவின் சுழல் ஜாலம் கைகொடுப்பது பலம்.
கைகொடுப்பாரா சங்ககரா:
இலங்கை அணியை பொறுத்தவரை, முதல் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தில்ஷன், கேப்டன் மகிளா ஜெயவர்தனா, மாத்யூஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். இவர்கள் இன்று எழுச்சி காணலாம். சதம் அடித்து அசத்திய சங்ககரா, மீண்டும் கைகொடுக்கலாம். இவர்களை தவிர சண்டிமால், உபுல் தரங்கா, திரிமன்னே, பெரேரா ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
பிரதீப் வாய்ப்பு:
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் குலசேகரா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியது பின்னடைவான விஷயம். இவருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள நுவன் பிரதீப், இதுவரை மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளார். முதன்முறையாக ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், அணியில் நிரந்தர இடம் பிடிக்கலாம். கடந்த போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய பெரேரா, இன்றும் அசத்தலாம். மலிங்கா விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினால் நல்லது. சுழலில் ஹெராத் எழுச்சி பெற வேண்டும்.
இரண்டாவது வெற்றியை நோக்கி இந்தியாவும், சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்ய இலங்கையும் காத்திருப்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.(thanks dinamalar0

No comments:

Post a Comment