Monday, December 6, 2010

பீட்டர்சன் இரட்டைசதம் (213*); இங்கிலாந்து 551/4





இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் பீட்டர்சன்.
அடிலெய்டு, டிச.5:  ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை துவங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. குக் 136 ரன்களுடனும், பீட்டர்சன் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்தது. குக் 148 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 18 பவுண்டரிகள் அடங்கும். ÷
குக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து காலிங்வுட் களம்புகுந்தார். மறுமுனையில் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 158 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
இங்கிலாந்து வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் பாண்டிங் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் பௌலர்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருந்தார். இருப்பினும் அவருடைய முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
பீட்டர்சன்-காலிங்வுட் ஜோடி விரைவாகவும், அதேசமயம் விக்கெட் விழாமலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ஸ்கோர் 452 ரன்களை எட்டியபோது காலிங்வுட், வாட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இயன்பெல் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். பீட்டர்சன் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 133-வது ஓவரில் பீட்டர்சன் இரட்டை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் பீட்டர்சன் அடித்த இரண்டாவது இரட்டைச்சதம் இதுவாகும். பீட்டர்சனின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரும் 500 ரன்களை கடந்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 213 ரன்களுடனும், இயான் பெல் 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கடந்த டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சிடிலுக்கு இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. அவர் 26 ஓவர்களை வீசி 100 ரன்களை வாரி இறைத்தார். இதேபோல் பொலிங்கர் 27 ஓவர்களில் 121 ரன்களையும், டோஹெர்ட்டி 24 ஓவர்களில் 120 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை விட 306 ரன்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. மேலும் 100 ரன்கள் சேர்த்துவிட்டு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இரண்டு நாள் ஆட்டமே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தோல்வியையோ அல்லது இன்னிங்ஸ் தோல்வியையோ தவிர்க்க கடுமையாகப் போராடும். இருப்பினும் இங்கிலாந்து பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 245 (ஹசி 93, ஹாடின் 56, வாட்சன் 51, ஆண்டர்சன் 4வி/51), இங்கிலாந்து -551/4 (பீட்டர்சன் 213*, குக் 148, டிராட் 78, காலிங்வுட் 42, இயான் பெல் 41*, ஹாரிஸ் 2வி/84).
(dinamani)

No comments:

Post a Comment