இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜொலித்த விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். சங்ககராவின் போராட்டம் வீணானது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
சேவக் அபாரம்:
நீண்ட ஓய்வுக்குப் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் காம்பிர், 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சேவக்குடன் விராத் கோஹ்லி இணைந்தார். இவர்கள் ஒன்றும், இரண்டுமாக சேர்த்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதலில் நிதானம் காட்டிய சேவக், பின் அதிரடிக்கு மாறினார்.
குலசேகரா ஓவரில் 2 பவுண்டரி விளாசிய இவர், மாத்யூஸ், பெரேரா பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். தொடர்ந்து அசத்திய சேவக், ஹெராத்தின் சுழலில் ஒரு பவுண்டரி அடித்து, தனது 38வது அரைசதத்தை பதிவு செய்தார்.
கோஹ்லி அசத்தல்:
மறுமுனையில் இவருக்கு "சூப்பர் கம்பெனி' கொடுத்தார் விராத் கோஹ்லி. இவர், பெரேரா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து அசத்தினார். மூன்றாவது பந்தில் எதிர்முனையில் இருந்த சேவக், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாக, 96 ரன்னுடன் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து "பெவிலியன்' திரும்பினார்.
ரோகித் சர்மா (5) வந்த வேகத்தில் நடையை கட்டினார். தனது அசத்தலை தொடர்ந்த விராத் கோஹ்லி, மாத்யூஸ் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி விளாசினார். இவர் சர்வதேச ஒருநாள் அரங்கில் 12 வது சதம் அடித்தார். இது இலங்கைக்கு எதிராக அடித்த நான்காவது சதம். சிறிது நேரத்தில் விராத் கோஹ்லி, 106 ரன்களுக்கு திரும்பினார்.
அதிரடி "ஜோடி':
பின், ரெய்னா, தோனி இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். மலிங்கா ஓவரில் 2 பவுண்டரி அடித்த ரெய்னா, இப்போட்டியில் முதல் சிக்சரை அடித்தார். மறுமுனையில் தோனியும், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்து, மலிங்காவை ஒரு "கை' பார்த்தார். இந்த ஜோடி 17வது முறையாக (46 இன்னிங்ஸ்) 50 ரன்கள் சேர்த்தது. தனது 22வது அரைசதத்தை பதிவு செய்த ரெய்னா (50), தோனி (35) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர்.
இந்திய அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் குவித்தது. இர்பான் பதான் (7), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
தில்ஷன் "அவுட்':
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தில்ஷன், தரங்கா ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜாகிர் கானின் முதல் ஓவரில், "கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய தில்ஷன் (6), இர்பான் பதானின் அடுத்த ஓவரில் அவுட்டானார். சற்று தாக்குப் பிடித்த தரங்கா, 28 ரன்கள் எடுத்தார். பின் வந்த சண்டிமால் (13), கேப்டன் ஜெயவர்தனா (12) நிலைக்கவில்லை.
சங்ககரா ஆறுதல்:
மாத்யூஸ் (7) ஜாகிர் கான் வேகத்தில் வீழ்ந்தார். ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், சங்ககரா மனம் தளராமல் போராடிய இவர், சர்வதேச அரங்கில் 14வது சதம் அடித்தார். திரிமான்னே (7) விரைவில் திரும்பினார். சங்ககராவுடன் சேர்ந்த பெரேரா, அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.
ஜாகிர் கானின் ஓவரில், மாத்யூஸ் 2 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் எடுக்கப்பட, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சங்ககராவை (133) உமேஷ் யாதவ் "போல்டாக்க' சற்று நிம்மதி ஏற்பட்டது. ஹெராத் (0), ரெய்னாவின் "த்ரோ'வில், ரன் அவுட்டானார்.
இந்தியா வெற்றி:
நம்பிக்கை தந்த பெரேராவும் (44) வெளியேற, இலங்கை அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மலிங்கா (19), குலசேகரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது.(Dinamalr)
No comments:
Post a Comment