Sunday, December 5, 2010

தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம்






காம்பிர் மீண்டும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்தியா.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், ரெய்னாவுக்குப் பதில் ஜாகிர் கான் மற்றும் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஜேமி ஹவ், சவுத்தி நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம், பிராங்க்ளின் இடம் பெற்றனர்.
மெக்கலம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை ஜாகிர் வீசினார். இவர் வீசிய ஆட்டத்தின் 2 வது பந்திலேயே, டக்-அவுட்டாகி வெளியேறினார் மெக்கலம். வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டிய கப்டில் (12), காம்பிரின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஸ் டெய்லர் (4) சொதப்பினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த வில்லியம்சன் (21), ஸ்டைரிஸ் (22) ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் கேப்டன் வெட்டோரி (3), ஹாப்கின்ஸ் (6) சோபிக்க வில்லை. நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிராங்க்ளின் ஆறுதல்: 
பின்னர் பிராங்க்ளின், மெக்கலம் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராங்க்ளின், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு நாதன் மெக்கலம் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், நாதன் மெக்கலம் அவுட்டானார். இவர் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்த்தார். பின்வரிசையில் மில்ஸ்15 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் சேர்த்தது. 72 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராங்க்ளின் அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜாகிர், அஷ்வின், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் மிரட்டல்: 
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர் அதிரடி துவக்கம் தந்தார். சேவக் இல்லாத குறையை நீக்கிய இவர், மெக்கே பந்து வீச்சில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவருடன் இணைந்த முரளி விஜய் வழக்கம் போல, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் (30) அவுட்டானார்.
மீண்டும் சதம்: 
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது போட்டியில் (ஜெய்ப்பூர்) சதம் அடித்து அசத்திய காம்பிர், நேற்றும் சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 9 வது சதமாக அமைந்தது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். மெக்கே பந்து வீச்சில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கோஹ்லி. 39.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 126 (16 பவுண்டரி) விராத் கோஹ்லி 63 (6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தியது இந்தியா. இவ்விரு அணிகள் மோதும் 4 வது போட்டி, வரும் 7 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது.

பாக்ஸ் செய்திகள்:
பாதிப்பு இல்லை
வதோதரா போட்டியில் சதம் அடித்தது குறித்து இந்திய கேப்டன் காம்பிர் கூறியது: ஒரு கேப்டனாக முதல் தொடரிலேயே வெற்றி பெற்றது, மகிழ்ச்சியான விஷயம். நேற்றைய போட்டியில் அடித்த சதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நான் அடித்த சதம், தொடரை கைப்பற்ற உதவியுள்ளது. கேப்டன் பொறுப்பு எனது ஆட்டத்திறனை எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் வழக்கம் போல எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 5-0 என வெல்வோம். இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

8 வது வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் (138 ரன்) மற்றும் வதோதரா (126 ரன்) போட்டிகளில் சதம் அடித்துள்ளார் இந்திய கேப்டன் காம்பிர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த 8 வது கேப்டன் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ரிக்கி பாண்டிங் (2 முறை), மகிலா ஜெயவர்தனா, சனத் ஜெயசூர்யா, சவுரவ் கங்குலி, கிறிஸ் கெய்ல், கிரீம் ஸ்மித், ஆலன் பார்டர் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

சூப்பர் ஜோடி
நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் நாதன் மெக்கலம், ஜேம்ஸ் பிராங்க்ளின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2001ல் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, டியான் நாஷ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில் -ரன் அவுட் (காம்பிர்)-    12 (15)
பிரண்டன் மெக்கலம் (கே) விஜய் (ப) ஜாகிர்    0 (1)
வில்லியம்சன் எல்.பி.டபிள்யு., (ப) முனாப்    21 (50)
டெய்லர் (கே) சகா (ப) ஜாகிர்    4 (16)
ஸ்டைரிஸ் (கே) யுவராஜ் (ப) அஷ்வின்    22 (35)
பிராங்க்ளின் -அவுட் இல்லை-    72 (108)
வெட்டோரி (கே) யுவராஜ் (ப) யூசுப்    3 (7)
ஹாப்கின்ஸ் (கே) யுவராஜ் (ப) யூசுப்    6 (6)
நாதன் மெக்கலம் (கே) காம்பிர் (ப) அஷ்வின்    43 (53)
மில்ஸ் -ரன் அவுட் (சகா)-    15 (9)
உதிரிகள்    26
மொத்தம்    (50 ஓவரில் 9 விக்., இழப்பு)    224
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (பிரண்டன் மெக்கலம்), 2-19 (கப்டில்), 3-34 (டெய்லர்), 4-49 (வில்லியம்சன்), 5-77 (ஸ்டைரிஸ்), 6-96 (வெட்டோரி), 7-106 (ஹாப்கின்ஸ்), 8-200 (நாதன் மெக்கலம்), 9-224 (மில்ஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் 8-2-31-2, நெஹ்ரா 8-1-38-0, முனாப் 10-0-28-1, அஷ்வின் 9-1-49-2, யூசுப் 8-0-27-2, ரவிந்திர ஜடேஜா 7-0-40-0.
இந்தியா
முரளி விஜய் -ரன் அவுட் (வெட்டோரி)-    30 (50)
காம்பிர் -அவுட் இல்லை-    126 (117)
கோஹ்லி -அவுட் இல்லை-    63 (70)
உதிரிகள்    10
மொத்தம்    (39.3 ஓவரில் 1 விக்., இழப்பு)    229
விக்கெட் வீழ்ச்சி: 1-115 (முரளி விஜய்).
பந்து வீச்சு: மில்ஸ் 6-0-39-0, மெக்கே 6.3-0-42-0, பிராங்க்ளின் 4-0-34-0, வெட்டோரி 9-0-41-0, நாதன் மெக்கலம் 8-0-36-0, ஸ்டைரிஸ் 6-0-32-0.(dinamalar) 

1 comment: